மன்னார்குடியில், ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு பணி
தளர்வுகள் இல்லாத ஊரடங்கையொட்டி மன்னார்குடியில் போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மன்னார்குடி;
தளர்வுகள் இல்லாத ஊரடங்கையொட்டி மன்னார்குடியில் போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தளர்வுகள் இல்லாத ஊரடங்கு
தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் 2 வார கால தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த 10-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடந்த 24-ந் தேதி முதல் ஒருவாரத்துக்கு தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு
இதன் காரணமாக மன்னார்குடி கடைத்தெரு மட்டுமல்லாது நகரின் அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளின் நடுவே தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
அவசியமின்றி வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மன்னார்குடியில் ‘டிரோன்’ மூலம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு பணியை நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மன்னார்குடி பந்தலடியில் தொடங்கி வைத்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story