பள்ளி மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்


பள்ளி மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 26 May 2021 11:41 PM IST (Updated: 26 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

2 பள்ளி மாணவிகளின் திருமணத்தை சைல்டுலைன் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

வேலூர்

வேலூர் வசந்தபுரத்தில் 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் சமுகநலத்துறை அலுவலர் லில்லி, சைல்டுலைன் ஊழியர் சங்கர், வேலூர் வடக்கு போலீசார் நேற்று இரவு அங்கு சென்று விசாரித்தனர். 

அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் கேளூரை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் மாணவியின் தாயாரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கினர்.

இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏரியூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தையும் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 

கொரோனா தொற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 2 மாணவிகளும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்படவில்லை என்று சைல்டுலைன் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story