1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 27 May 2021 12:04 AM IST (Updated: 27 May 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கனமழை
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து குமரி மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், 3 ஆயிரம் ஏக்கர் வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் குமரி மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறினார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
முன்கூட்டியே நடவு
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் நெற் பயிர்கள் நடவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் முன்கூட்டியே நடவு பணியை தொடங்கினர். அந்த வகையில் இறச்சகுளம், திடல், பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் எதிர்பாராத விதமாக கன மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் வள்ளியாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. பேயன்குழியில் 2 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தோட்டங்களில்...
இதனால் உடைப்பு ஏற்பட்ட நீர் நிலைகளில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் தண்ணீர் வயல் வெளிகளையும், விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துவிட்டது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் வாழை தோட்டத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது. அதோடு தென்னை, ரப்பர் தோட்டங்களிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. வாழைத் தோட்டத்தை பொருத்த வரையில் 2 நாட்களில் தண்ணீர் வடிந்து விட்டால் பிரச்சினை இல்லை. அதற்கு மேலாக தண்ணீர் கிடந்தால் வாழை பயிர்கள் நாசமாகிவிடும். எனவே தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story