வால்பாறையில் விடிய விடிய பலத்த மழை


வால்பாறையில் விடிய விடிய பலத்த மழை
x
தினத்தந்தி 27 May 2021 12:15 AM IST (Updated: 27 May 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 

விடிய விடிய மழை

மலைப்பிரதேசமான வால்பாறையில் இந்த மாதம் முதல் வாரம் வரை கடுமையான வெயில் இருந்தது. பின்னர் லேசான மழை பெய்தது. அதைத்தொடர்ந்து தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்த கனமழை பெய்து வருகிறது. 

பகல் நேரத்தில் மழை குறைவாக பெய்தாலும், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்கிறது. இந்த நிலையில்  இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, இரவு முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்தது. 

தண்ணீர் வரத்து அதிகரிப்பு 

இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து நீரோடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள வெள்ளமலை ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் இருகரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதன் காரணமாக இங்குள்ள சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 15.25 அடியாக எட்டி உள்ளது. 

425 கனஅடி தண்ணீர் 

அதுபோன்று சின்னக்கல்லார், நீரார் பகுதியில் பெய்து வரும் கனமழையின் தண்ணீர் மேல் நீரார் அணை, நீரார் அணைகளுக்கு சென்று அங்கிருந்து சுரங்க கால்வாய்கள் மூலம் திறக்கப்பட்டு அந்த தண்ணீரும் சோலையார் அணையை சென்று சேரத் தொடங்கி வருகிறது. 

இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேல்நீரார் அணையில் இருந்து திறக்கப்பட்ட 273 கனஅடி தண்ணீரும், நீரார் அணையிலிருந்து 68 கனஅடியும், ஆறுகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் என மொத்தம் அணைக்கு வினாடிக்கு 425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

விவசாயிகள் மகிழ்ச்சி 

வால்பாறை பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தாலும், அவ்வப் போது வெயிலும் அடித்து வருகிறது. இதனால் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

வால்பாறை பகுதியை பொறுத்தவரை மே மாதத்தில் கோடைமழை குறைந்தளவில் மட்டுமே பெய்யும். 

இதனால் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்பதால் தேயிலை செடிகளை பல்வேறு வகையான பூச்சிகள், நோய்கள் தாக்கி பச்சை தேயிலை உற்பத்தியை பாதிக்கும். 

ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் 96 மி.மீ. மழையும், நீராரில் 60 மி.மீ., சோலையார் அணையில் 59 மி.மீ., வால்பாறையில் 54 மி.மீ. மழையும் பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story