குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குளச்சல் நகராட்சி பகுதிகள், ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குறும்பனை, கோடிமுனை, கொட்டில்பாடு வழியாக செல்லும் ஏ.வி.எம். சானல் நிரம்பியதால் காக்கைகுளம், பெரிய குளம், தாமரைக்குளம் ஆகிய 3 குளங்கள் நிறைந்து அருகாமையிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதை நேரில் பார்வையிட்டார்.
கோரிக்கை
அப்போது, குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குதந்தை மரிய செல்வன் குளச்சல் பகுதியில் ஓடுகின்ற ஏ.வி.எம். சானலை சுத்தப்படுத்தி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மரமடி சிங்காரர் வேலன் காலனி, சைமன்காலனி வரையிலுள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர், அப்பகுதிகளில் வசித்து வந்த மக்களை இனிகோ ஆடிட்டோரியம், வாணியக்குடி ஜோசப் அரங்கம், இரும்புலி கணேசபுரம் ரீத்தம்மாள் சமூக நலக்கூடம் ஆகியவற்றில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திட வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதோடு குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள தண்ணீரினை விரைந்து அப்புறபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை அளிக்குமாறு வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதை தொடர்ந்து உபரி நீரை வெளியேற்றுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
போர்கால அடிப்படையில்...
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீர் செய்யும் பணி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை சிறப்பு பம்புகள் மூலமாக அகற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளின் அருகாமையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் நோய்தொற்று வராமல் தடுத்திட பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேங்காப்பட்டணம் மற்றும் குளச்சல் துறைமுக பகுதிகளிலுள்ள மீனவர்கள் தாங்கள் கடலுக்கு சென்று பிடித்த மீன்களை மொத்தமாக மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதித்ததுபோல மீன்களையும் மாவட்ட நிர்வாகத்தால் வழிகாட்டுதலின்படி வாகனங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் ரோஸ்லேண்டு, ரீத்தாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சைமன்காலனி கிராம நிர்வாக அலுலலர் சோபி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், சைமன்காலனி ஊராட்சி தலைவர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story