திண்டுக்கல்லில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்


திண்டுக்கல்லில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 27 May 2021 1:04 AM IST (Updated: 27 May 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கினர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கினர்.
நடமாடும் வாகனங்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறிகள் வினியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை, காய்கறிகள் வினியோகம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பில் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள உழவர் சந்தையில் இருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மினி வேன், ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் என 40 வாகனங்களில் திண்டுக்கல்லில் நத்தம் சாலை உள்பட நகரின் முக்கிய இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 35 வாகனங்கள் மூலம் நகர் பகுதியில் காய்கறிகள் விற்பனை நடக்கிறது. அபிராமி கூட்டுறவு பண்டகசாலை சார்பில் 5 லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி கிலோ ரூ.25
திண்டுக்கல் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அவற்றின் விலை குறைந்தது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.25, கத்தரிக்காய் ரூ.45, வெண்டைக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.30, பச்சைமிளகாய் ரூ.40, அவரை ரூ.60, கொத்தவரை ரூ.20, பாகற்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.65, பெரிய வெங்காயம் ரூ.35 என விற்கப்பட்டது. இதேபோல் புடலைங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, பீட்ரூட் ரூ.25, தேங்காய் ரூ.45, கேரட் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.35 என விற்பனை ஆனது. 
இதே போல் மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலம் சற்று விலை மாறுதல்களுடன் காய்கறிகள் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

Next Story