தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி நிச்சயம் அமைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி நிச்சயம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தென்காசி:
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி நிச்சயம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, மனோஜ் பாண்டியன், கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி 1,256 முன்களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 2 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதில் இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினருக்கு 18,000 தடுப்பூசிகள் உள்ளதாக கூறினார்கள். இவை செலுத்தப்பட்டு காலியான உடன் மீண்டும் தடுப்பூசிகள் அனுப்பப்படும்.
ஆக்சிஜன்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 1½ கிலோ திரவ ஆக்சிஜன் கிடங்கு உள்ளது. இதனை 5 கிலோ கிடங்காக மாற்றுவதற்கு கூறியுள்ளார்கள். இதேபோன்று சங்கரன்கோவிலில் ஆக்சிஜன் கிடங்கு அமைக்க கூறியுள்ளார்கள். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது தென்காசி ஆஸ்பத்திரியில் 2,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுவதாகவும் மேலும் தனியார் ஆய்வகங்களில் 500 பேருக்கு நடத்த உள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் கூறினார். இருப்பினும் தென்காசியில் இதற்கென ஒரு ஆய்வகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மருத்துவ கல்லூரி
இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி தென்காசியில் அமைக்க நிச்சயம் ஏற்பாடு செய்யப்படும். கடந்த ஆட்சியில் 13 சதவீத தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் தற்போது தடுப்பூசிகள் வீணாகாத அளவில் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் அதிக வீரியமுள்ள தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதுகுறித்து வருகிற 6-ந்் தேதி விவரம் தெரியும். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் 286 பேருக்கு உள்ளது.
தமிழகத்தில் 8 கோடியே 38 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் 1½ கோடி தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். மேலும் 3½ கோடி தடுப்பூசிகளுக்கு உலக அளவிலான டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல இடங்களில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், துணை இயக்குனர் டாக்டர் யோகானந்த், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்-சங்கரன்கோவில்
முன்னதாக கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா சிகிச்சை பெற்று வரும் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். குருக்கள்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் செய்யது சமீம் ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story