நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை


நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 27 May 2021 1:12 AM IST (Updated: 27 May 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை தொடங்கப்பட்டது.

சிவகிரி:
தென்காசி மாவட்டத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை தொடங்கப்பட்டது.

நடமாடும் வாகனங்கள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மருந்தகம், பால் வினியோகம் தவிர மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது.

ஆனாலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. 

சிவகிரி- கடையம்

சிவகிரியில் நடமாடும் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை தாசில்தார் ஆனந்த் தொடங்கி வைத்தார். நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன், தேர்தல் துணைத் தாசில்தார் கருத்தபாண்டி, மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் அய்யனார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கடையம் அருகே கீழஆம்பூரில் வேளாண்மை உழவர் அலுவலர் துறை சார்பில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புளியங்குடி- செங்கோட்டை

புளியங்குடியில் நகரசபை ஆணையாளர் குமார்சிங் தலைமையில், சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி முன்னிலையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.எம்.ரஹீம், நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.

Next Story