நிலத்தை வணங்கி பணிகளை தொடங்கிய விவசாயிகள்


நிலத்தை வணங்கி பணிகளை தொடங்கிய விவசாயிகள்
x
தினத்தந்தி 27 May 2021 2:00 AM IST (Updated: 27 May 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே பொன்னேர் பூட்டி நிலத்தை வணங்கி விவசாய பணியை விவசாயிகள் தொடங்கினர்.

சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே பொன்னேர் பூட்டி நிலத்தை வணங்கி விவசாய பணியை விவசாயிகள் தொடங்கினர்.
‘பொன்னேர் பூட்டும்’ விழா
விவசாய பணிகளைத் தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகுபடி பணிகளைத் தொடங்குவார்கள். அதேபோல், ஆண்டு தொடக்கத்தின்போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர்தான், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியைத் தொடங்குவது ஒரு வழக்கமாகும். இந்த வழக்கமான நிகழ்வை ‘பொன்னேர் பூட்டும்' விழாவாக இன்றளவும் சிவகங்கை மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறுவை, சம்பா சாகுபடிகள் முடிந்ததும் கோடை காலத்தில் வயல்களில் எந்த சாகுபடி பணியையும் மேற்கொள்ளாமல் வயலை அப்படியே ஓரிரு மாதங்களுக்கு விட்டுவிடுவார்கள். பின்னர், தமிழர்களின் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் பிறந்ததும் நல்ல நாள் பார்த்து அந்த வயலில், பொன்னேர் பூட்டி பணியைத் தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் அந்த ஆண்டு சாகுபடியில் எவ்வித இடையூறும் இல்லாமல், மகசூல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பணிகளை தொடங்கினர்
இதன்படி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று பொன்னேர் பூட்டும் விழா நடைபெற்றது. விழாவில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து மாட்டு வண்டியில் ஏர்பூட்டி நிலத்தை வணங்கி தங்களுடைய விவசாய பணிகளை தொடங்கினர். சிங்கம்புணரி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்புத்தாண்டு பிறந்த பிறகு பெய்யும் கன மழையின் அடிப்படையில் இந்த விழாக்கள் நடைபெறும்.
தமிழ் புத்தாண்டு பிறந்த பிறகு கடந்த வாரம் பெய்த கன மழையை தொடர்ந்து கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பொன்னேர் பூட்டும் விழா சமூக இடைவெளியோடு நடைபெற்றது. கோவில் நிலத்தில் பொன்னேர் பூட்டிய பிறகு விவசாயிகள் தங்கள் நிலங்களில் சென்று ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சியை தொடங்கினர்.
விவசாயம் செழிக்க....
இதுகுறித்து விவசாயி சத்தியன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப் பிறப்பிற்கு பிறகு தொடங்கப்படும் விவசாய பணிகள் தொடங்க இவ்விழா நடைபெறும். தமிழ் வருடப்பிறப்பு பிறந்த பிறகு பெய்கின்ற முதல் கன மழையை தொடர்ந்து பஞ்சாங்கம் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் ஆண்டுகளில் விவசாயம் செழித்து உணவு தானியங்கள் அதிகம் கிடைக்கவும், குடிநீர் பஞ்சம் இன்றி வாழவும் பொன்னேர் விழா நடத்தப்படுகிறது என்றார். 
தற்போது நவீன விவசாயத்தின் ஒரு பகுதியாக உழவு மாடுகளும், ஏர் கலப்பையும் மறைந்து வந்தாலும், டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்களைக் கொண்டு பழமை மாறாமல் விவசாயிகள் பென்னேர் பூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

Next Story