300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 27 May 2021 2:00 AM IST (Updated: 27 May 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்

காரைக்குடி
காரைக்குடியில் 300 படுக்கை வசதிகளுடன்  கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
காரைக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மையம், குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் மற்றும் 300 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிய கட்டிடம் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியாலும், மக்கள் நல்வாழ்வு துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதன் மூலமும் சற்று குறைய தொடங்கி உள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. அதில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் போதிய அளவு இருப்பில் உள்ளது. தற்போது காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் திறக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் உள்ள 300 படுக்கைகளில் 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும்.
ஆக்சிஜன் படுக்கைகள்
தற்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி அரசு பழைய தலைமை மருத்துவமனை, சோமநாதபுரம் அரசு மருத்துவமனை இவற்றுடன் தாலுகா அளவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சிகிச்சை நிலையினை விரிவுபடுத்தும் சூழல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிகிச்சை வழங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றுடன் தனியார் மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே சிகிச்சை குறித்து அச்சம் வேண்டாம். அந்த அளவிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் சிகிச்சைக்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story