கோபி அருகே போலி டாக்டர் கைது


கோபி அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 27 May 2021 2:16 AM IST (Updated: 27 May 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கடத்தூர்
கோபி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். 
சான்றிதழ் இல்லை
கோபி அருகே உள்ள காசிபாளையத்தில், நாகராஜ் (வயது 58) என்பவர் டாக்டருக்கு படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் யசோதாபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று யசோதாபிரியா, சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் நாகராஜின் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். அவர் டாக்டருக்கு படித்ததற்கான சான்றிதழையும் கேட்டார்கள். ஆனால் அவரிடம் எந்த சான்றிதழும் இல்லை. அவர் டாக்டருக்கு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
கைது
இதைத்தொடர்ந்து யசோதாபிரியா இதுகுறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி டாக்டர் நாகராஜை கைது செய்தார்கள்.
மேலும் கைது செய்யப்பட்ட நாகராஜ் நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக வேலை செய்து வந்ததும், கடந்த 2012-ம் ஆண்டு இதே போன்ற வழக்கில் அவர் கைதாகி, பணியில் இருந்து நீக்கப்பட்டதும், அதற்காக அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
தண்டனை முடிந்து வெளியே வந்த நாகராஜ் மீண்டும் டாக்டராக தன்னை கூறிக்கொண்டு மருத்துவம் பார்த்து மீண்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

Next Story