ஈரோடு மாவட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு: கொரோனாவுக்கு 15 பேர் பலி; புதிதாக 1,642 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், 15 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1,642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், 15 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 1,642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா கோரத்தாண்டவம்
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் தொற்றின் வேகம் குறையாமல் உயர்ந்து கொண்டே செல்வது மக்களை பெரும் அச்சமடைய செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்றும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களை விட அதிகமாக உள்ளது. ஒரே நாளில் புதிதாக 1,642 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது ஈரோடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாநகர் பகுதியில் குடியிருப்புகள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தற்போது கிராமப்புறங்களையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகமாக காணப்படுகிறது.
13 ஆயிரம் பேர்
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 47 ஆயிரத்து 998 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 ஆயிரத்து 733 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,021 பேர் நோயில் இருந்து மீண்டு உள்ளனர்.
தமிழகத்திலேயே தொற்று அதிகமாக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்றாக உள்ளது. இதன்காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி விட்டது. தற்போது 12 ஆயிரத்து 986 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 பேர் பலி
கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பும் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுவது வேதனையளிக்கிறது. மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி 15-ந் தேதியும், 73 வயது முதியவர் 17-ந் தேதியும், 70 வயது மூதாட்டி 18-ந் தேதியும், 41 வயது ஆண், 41 வயது பெண் ஆகியோர் 19-ந் தேதியும், 52 வயது ஆண் 20-ந் தேதியும், 54 வயது பெண், 65 வயது முதியவர், 70 வயது மூதாட்டி ஆகியோர் 23-ந் தேதியும், 62 வயது முதியவர், 36 வயது ஆண் ஆகியோர் 24-ந் தேதியும், 65 வயது முதியவர், 64 வயது முதியவர், 75 வயது மூதாட்டி, 84 வயது முதியவர் ஆகியோர் நேற்று முன்தினமும் உயிரிழந்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story