சேலத்தில் 2-வது நாளாக கனமழை


சேலத்தில் 2-வது நாளாக கனமழை
x
தினத்தந்தி 27 May 2021 3:57 AM IST (Updated: 27 May 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 2-வது நாளாக கனமழை

சேலம்:
சேலத்தில் 2-வது நாளாக கனமழை பெய்தது.
கனமழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பல இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த வீடுகளுக்குள் மழைநீரும் புகுந்தது.
 இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். மழையின் போது பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த ரகு என்பவரது வீட்டின் சுவர் மழையினால் நனைந்தது. பின்னர் இரவில் அந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் ரகு மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 பொதுமக்கள் அவதி
இந்தநிலையில், சேலத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சுமார் 5.30 மணி அளவில் திடீரென கன மழை பெய்தது. சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, அம்மாபேட்டை, குகை, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மணக்காடு ராஜகணபதி நகரில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து தெருவில் ஆறாக ஓடியதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
கோரிக்கை
இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் மழைநீர் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ராஜகணபதி நகரில் சாக்கடை கால்வாயை தூர்வாரி சீரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோல் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு, கிச்சிபாளையம், களரம்பட்டி பகுதியிலும் போதுமான அளவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் சாக்கடை கழிவு நீருடன் கலந்து தெருவில் ஆறாக ஓடுகிறது.
மழை அளவு
சேலம் மாநகரில் நேற்று மாலை மழை பெய்தபோது பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- சேலம்-67, சங்ககிரி-50.3, தம்மம்பட்டி-40, வீரகனூர்-19, ஏற்காடு-16.2, எடப்பாடி - 12, ஓமலூர்-11.4, பெத்தநாயக்கன்பாளையம்-8, காடையாம்பட்டி-7.2, கரியகோவில்-7, ஆத்தூர்-5.1, கெங்கவல்லி, வாழப்பாடி-5, ஆனைமடுவு-3.
.............

Next Story