வாழப்பாடி பகுதியில் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய 15 விவசாயிகளுக்கு அனுமதி
வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய 15 விவசாயிகளுக்கு அனுமதி
வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியில் வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு, 15 விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், தக்காளி, அவரை, வெண்டை, பாகற்காய், பீர்க்கன், புடலை, முருங்கைக்காய், சுரைக்காய், வெங்காயம் உள்நாட்டு காய்கறிகள் மட்டுமின்றி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், கேரட் ஆகிய காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று பொது முடக்கத்தால், விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், காய்கறி விலை வீழ்ச்சியடைந்து விட்டதாகக் கூறி, வாழப்பாடி பகுதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து, வாகனங்களில் நகர்ப்புறங்களுக்கு கொண்டு சென்று, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
15 விவசாயிகள்
காய்கறிகளுக்கு அரசு நியாயமான குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யவும், உற்பத்தி செய்யும் காய்கறிகளை விவசாயிகளே வாகனங்களில் கொண்டு சென்று நேரடியாக நுகர்வோர்களிடம் விற்பனை செய்வதற்கு தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகள், 20 கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்வதற்கு, உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் மன்ற தன்னார்வலர் குழு உள்ளிட்ட 15 விவசாயிகளுக்கு வாழப்பாடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலைவாணி நேற்று அனுமதி வழங்கினார்.
வாழப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகை, அரளி, சம்பங்கி, சாமந்தி, நந்தியாவட்டம், குண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்களை சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கும் 5 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டால், வாழப்பாடி தோட்டக்கலைத்துறை துணைஅலுவலர் குமார்-9443538087, உதவி அலுவலர்கள் விஜயக்குமார்-9940448764, காயத்திரி-8270039726, கனகா-7708640782 ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் கலைவாணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story