சேலம் குமாரசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம்:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளில் ஒன்றை போட்டுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி, சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட அங்கு வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறியதால் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்தனர். அப்போது நுழைவு பகுதியில் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள ஊழியர்கள் தடுப்பூசி தற்போது கையிருப்பில் இல்லை. எனவே நாளை வாருங்கள் என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்து கொண்டு உள்ளோம். ஆனால் தினமும் தடுப்பூசி இல்லை என்று எங்களை அலைகழிக்கிறீர்கள் என்றுக் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் நேற்றுஅங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story