சேலம் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேருக்கு சிகிச்சை


சேலம் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 27 May 2021 3:58 AM IST (Updated: 27 May 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேருக்கு சிகிச்சை

சேலம்:
சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்ற நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
39 பேருக்கு சிகிச்சை
இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டதுடன், சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் கூறும் போது, ‘சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல் இதுவரை எங்களுக்கு வரவில்லை’ என்றார்.

Next Story