ஊரடங்கால் மலை கிராமங்களில் அதிகரிக்கும் சாராய விற்பனை


ஊரடங்கால் மலை கிராமங்களில் அதிகரிக்கும் சாராய விற்பனை
x
தினத்தந்தி 27 May 2021 3:58 AM IST (Updated: 27 May 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் மலை கிராமங்களில் அதிகரிக்கும் சாராய விற்பனை

சேலம்:
ஊரடங்கால் மலை கிராமங்களில் ஊறல் போட்டு சாராயம் விற்பனை அதிகரித்ததை அடுத்து, ஊறல்களை அழித்து வனத்துறையினரும், போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாராய ஊறல்
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க வனத்துறையினருக்கு மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டார். 
இதையடுத்து சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி மேற்பார்வையில் குரும்பப்பட்டி பிரிவு வனவர் குழுவினர் தேன்மொழி, செட்டி பாபு, பிரியங்கா, கோபிநாத், தமிழ்வாணன், நர்மதா ஆகியோைர கொண்ட தனிப்படையினர் ஏற்காடு வனப்பகுதியில் கப்பூத்து காப்பு காடு, குண்டூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு 2 இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் தயார் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை வனத்துறையினர் கண்டுபிடித்து அந்த இடத்திலேயே அழித்தனர்.
கருமந்துறை
இதேபோல், கருமந்துறை வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் மணிகண்டன், பாஸ்கர் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகல்ராயன் பீட், கரிய கோவில், பாச்சாடு மலை கிராம பகுதிகளில் சாராய ஊறல் பேரல்கள் 3 இடங்களில் இருந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர் அதை அங்கேயே கொட்டி அழித்தனர். 
மேலும் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனத்தை சேதப்படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
கன்னப்பாடியில் ஒருவர் கைது
ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகவும் பலர் மலை கிராமங்களுக்கு சென்று சாராயம் குடித்து விட்டு, வாங்கி வருவதாகவும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் மலை கிராமங்களில் சாராய வேட்டை நடத்தினர். 
அப்போது கன்னப்பாடி மலை கிராமத்தை சேர்ந்த மாதன் (வயது 55) என்பவர் தனது தோட்டத்தில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாதனை கைது செய்த போலீசார், 60 லிட்டர் சாராயம் காய்ச்ச போட்டிருந்த ஊறல் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ்இதையடுத்து மாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story