சிகிச்சை பெறாமல் அலட்சியம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக உள்ளதாகவும், இதனால் கொரோனா மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக உள்ளதாகவும், இதனால் கொரோனா மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக வருவாய்த்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் பலரும் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் வீடுகளிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தாலும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த தொற்று வீடுகளில் உள்ளவர்களுக்கும் பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
அறிக்கை தயாரிப்பு
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா வாரியாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் விவரங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த விவரங்கள் மற்றும் செல்போன் எண்களில் தாலுகா அலுவலகத்தில் இருக்கும் வருவாய்த்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு வருகிறார்கள். கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்களா? எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான அனுமதி பெற்றுள்ளனரா? என்பது குறித்த விவரங்களை கேட்டு இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்கிறார்கள்.
இவ்வாறு தயாரிக்கும் அறிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு தாலுகா வாரியாக அனுப்பிவைக்கப்படுகிறது. அறிக்கையின்படி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கிறர்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். அவர்கள் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். மீண்டும் அவர்கள் சிகிச்சை பெறாமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறாக கொரோனா நோயாளிகளை கண்காணித்து வருவாய்த்துறையினர் மூலம் அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-----
----
Related Tags :
Next Story