தக்காளி சாகுபடியில் தொடரும் சோகம்
உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடியில் போதிய விலை இல்லாததால் டிராக்டர் மூலம் அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடியில் போதிய விலை இல்லாததால் டிராக்டர் மூலம் அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
மன உளைச்சல்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுகிய காலப் பயிர்களாகவும் தொடர் வருமானம் தரக் கூடியதாகவும் உள்ள காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் தக்காளி, வெண்டை, பாகல், கத்தரி போன்ற பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் அதிக அளவில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொருள் நஷ்டம் மட்டுமல்லாமல் மன
உளைச்சலுக்கும் ஆளாகும் விவசாயிகள் டிராக்டர் மூலம் தக்காளிப் பயிர்களை அழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்வதற்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. ஒரு ஏக்கரில் 10 டன்னுக்கு மேல் மகசூல் எடுக்க முடியும் என்பதால் லாபகரமான பயிராகவே இருந்துள்ளது. ஆனால் சமீப காலங்களாக சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.20 முதல் ரூ.50 வரையிலே விற்பனையாகிறது. தற்போது முழு ஊரடங்கு காலத்தில் வெளியூர்களுக்குத் தக்காளி கொண்டு செல்வதும் தடைபட்டுள்ளது.
இடைத் தரகர்கள்
கடந்த ஞாயிறன்று முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட போது மட்டும் ஒரு பெட்டி தக்காளியை ரூ.150 கொடுத்து வியாபாரிகள் விளை நிலத்துக்கே தேடி வந்து வாங்கிச் சென்றார்கள். ஆனால் எங்கள் கண் முன்னேயே அந்த தக்காளியை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.80 என்று பொதுமக்களிடம் விற்பனை செய்யும் கொடுமையும் நடந்தது. இப்படி பெரும்பாலும் இடைத் தரகர்களும் வியாபாரிகளும் மட்டுமே சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு போட்ட முதலைக் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.இதனால் சாகுபடி செய்துள்ள தக்காளியை முழுமையாக அழித்து விட்டு வேறு பயிர் சாகுபடி செய்யலாம் என்ற நோக்கத்தில் டிராக்டர் மூலம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.நமது பகுதியில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதன வசதி கொண்ட கிடங்கு அமைக்க வேண்டும்.மேலும் ஜாம், சாஸ் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கும் வகையிலான தொழிற்சாலைகளை நமது பகுதியில் தொடங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இது வரை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.எனவே தக்காளிக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்கள் முன்வருவார்கள்.
இவ்வாறு என்று அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story