பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்து பணியாற்ற தயார் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி


பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்து பணியாற்ற தயார் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
x
தினத்தந்தி 27 May 2021 6:03 PM IST (Updated: 27 May 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்து பணியாற்ற தயார் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தடுப்பூசி முகாம்கள் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் நாளை (அதாவது இன்று) திறக்கப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் மருத்துவமனைகளை தவிர 200 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு நாள் ஒன்றுக்கு 70 பேருக்கு குறையாமல் கொரோனா தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் இல்லை என்ற நிலை இன்னும் 10 நாட்களில் உருவாக்கப்படும்.

நாகை மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 19 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

நாகை மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறுவது தவறான தகவல் ஆகும். கடந்த ஆட்சி காலத்தில் தாமாக முன்வந்து தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு சேவை செய்தனர். கடந்த ஆட்சி காலத்தில் செய்த தவறை இந்த முறை செய்து விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து குழு அமைத்துள்ளார்.

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினர் தாமாக முன்வரவேண்டும். அதை விட்டு எங்களை அழைக்கவில்லை என்று கூறுவது தவறு. பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினர் முன்வந்தால் அவர்களுடன் கைகோர்த்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் பிரவீன்நாயர், முன்னாள் அமைச்சர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தாசில்தார் ஜெயபால், திருமருகல் ஒன்றிய ஆணையர் சரவணன், நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன், திருமருகல் ஒன்றிய செயலாளர்கள் செல்வ.செங்குட்டுவன், சரவணன், திட்டச்சேரி பேரூர் செயலாளர் முகமது சுல்தான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் திருக்குவளையில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூர் பொறுப்பாளர் மரியசார்லஸ், ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் பிரவீன்நாயர், பயற்சி கலெக்டர் சரண்யா, கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலி, கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், தேவூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண் பிரபு, டாக்டர்கள் ரோகினி, சந்திரமவுலி ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் 379 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 319 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 60 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story