தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
திருவண்ணாமலை
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது.
இதில் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கண்ணகி, திட்ட அலுவலர் (முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) ஆனந்தராஜ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பொதுமக்களின் நலன் கருதி 4 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
புகார் செய்யலாம்
அதன்படி ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, அருணை மருத்துவமனை, ராஜி மருத்துவமனை மற்றும் புனித தாமஸ் மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். இந்த தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக, தீவிரம் இல்லாத (ஆக்சிஜன் உதவி இல்லாமல்) கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் தீவிரம் அல்லாத கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.35 ஆயிரமும், ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.30 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஆக்சிஜன் உதவியுடன் படிப்படியாக குறைக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் பெறுவது குறித்த புகார்களை 18004253993 மற்றும் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் அளிக்கலாம். திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story