புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தஞ்சையில், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
புதிய வேளாண் சட்டங்களை மத்தியஅரசு திரும்ப பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதியில் இருந்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைவதை குறிக்கும் விதத்தில் நாடு முழுவதும் நேற்று கருப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழக உழவர் இயக்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தொ.மு.ச., மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்கள் வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றியும், அவர்களது சட்டைகளில் கருப்பு சின்னம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் மாலதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். தென்னமநாட்டில் உள்ள தனது வீட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் கருப்புக்கொடி ஏற்றினார். மேலும் இவர்கள் வீடுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் நின்று கருப்பு கொடிகளை ஏந்தி மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சை சிவாஜிநகரில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், தஞ்சை கீழராஜவீதி ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் மாநில செயலாளர் சி.சந்திரகுமார், தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீர.மோகன், அரசு போக்குவரத்து சங்க மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க காலனியில் விவசாயிகள் சங்க போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், வெங்கடேஸ்வரா நகரில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்டக்குழு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோரும் கருப்புக்கொடியை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
மேலும் இவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தனர். இதேபோல் மாவட்டக்குழு அலுவலகம் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர் அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. பூதலூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
Related Tags :
Next Story