சாலையில் மயங்கி விழுந்த கொரோனா நோயாளி-மக்கள் அலறியடித்து ஓட்டம்


சாலையில் மயங்கி விழுந்த கொரோனா நோயாளி-மக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 27 May 2021 8:24 PM IST (Updated: 27 May 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கொரோனா நோயாளி சாலையில் மயங்கி விழுவது போன்று போலீசார் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்: 


சாலையில் மயங்கி விழுந்தார் 
திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதேபோல் தினமும் பலர் இறக்கின்றனர். எனவே, ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த தினமும் 1,200 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். 

ஆனால், கொரோனா அச்சம் இல்லாமல் தேவையின்றி பலர் சுற்றித்திரிகின்றனர். அதுபோன்ற நபர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். எனினும், மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் ஆரோக்கியமாதாதெரு பகுதியில் மெங்கில்ஸ் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது 2 பெண்கள் சாலையில் நடந்து வந்தனர். உடனே போலீசார், அந்த பெண்களை மறித்து தேவையின்றி வெளியே சுற்றாதீர்கள் என்று அறிவுறுத்தி கொண்டிருந்தனர். 

அப்போது அவர்களுக்கு அருகில் வந்த ஒரு வாலிபர் திடீரென மயங்கி சாலையில் விழுந்தார்.

அலறியடித்து ஓட்டம்
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து போலீசாருடன் சேர்ந்து, சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.

 எனினும் அவருக்கு கடுமையாக இருமலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த ஒருவர், இருமல் இருப்பதால் வாலிபருக்கு கொரோனா தொற்றாக இருக்கலாம் என்றார். 

அதை கேட்டதும் அருகில் நின்ற மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும் இதுவரை நடந்தது நாடகம் என்றும், மயங்கி விழுந்த வாலிபர் கொரோனா நோயாளி அல்ல என்றும் போலீசார் கூறினர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அதன்பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார், மக்களை அழைத்து கொரோனாவால் உயிருக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் ஊரடங்கின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 திண்டுக்கல்லில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story