தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க 27 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அங்கீகாரம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க 27 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அங்கீகாரம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 May 2021 9:25 PM IST (Updated: 27 May 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க 27 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 27 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா சிகிச்சை
தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது. 
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்றுக்காலத்தில் மக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடவும் திட்டப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரிகள்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆர்த்தி ஆஸ்பத்திரி, கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை, தூத்துக்குடி திரு இருதய மருத்துவமனை (அமெரிக்கன் ஆஸ்பத்திரி), கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனை, கோவில்பட்டி கமலா ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, காயல்பட்டினம் கே.எம்.டி மருத்துவமனை, தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை, தூத்துக்குடி சிட்டி மருத்துவமனை, நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை, தூத்துக்குடி தனராஜ் மருத்துவமனை, கோவில்பட்டி சுதிக்ஷா பிரபு மருத்துவமனை, கோவில்பட்டி ஸ்ரீசெந்தூர் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, கோவில்பட்டி ஜெயஸ்ரீ மருத்துவமனை, கோவில்பட்டி சசி மருத்துவமனை, கோவில்பட்டி லதா மருத்துவமனை, கோவில்பட்டி ஸ்ரீ முரளி மருத்துவமனை, கோவில்பட்டி ஜெய் மருத்துவமனை, கோவில்பட்டி துளசி மருத்துவமனை, தூத்துக்குடி எபனேசர் மருத்துவமனை, வீரபாண்டியன்பட்டினம் பி.ஜி. மருத்துவமனை, தூத்துக்குடி ஏ.ஆர்.ஆர் மருத்துவமனை, கோவில்பட்டி ஆர்.எம்.எஸ். மருத்துவமனை, கோவில்பட்டி சிவா மருத்துவமனை, கோவில்பட்டி வாசன் மருத்துவமனை, தூத்துக்குடி ராயல் மருத்துவமனை, தூத்துக்குடி லட்சுமி பாலி கிளினிக் ஆகிய 27 ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
காப்பீடு திட்டம்
இந்த கட்டண நிர்ணயம் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை காட்ட வேண்டும் மற்றும் மருத்துவ விருப்பப் படிவம் நிரப்பப்பட வேண்டும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை இல்லாதாவர்கள் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் வருமான சான்றிதழினை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மட்டும் பெற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் முதலவரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து காப்பீட்டுத் திட்ட அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய விரும்புவர்கள் இலவச தொலைபேசி எண் 1800 425 3993 அல்லது தூத்துக்குடி மாவட்ட முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலரை 7373004970 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். 
மேலும் இந்த மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை விபரங்களை அறிய https://tncovidbeds.tnega.org என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
வசூலிக்க கூடாது
மேலும் மருந்துகள் மற்றும் கூடுதல் பரிசோதனைகளுக்கான கூடுதல் கட்டணம் பயனாளிகளின் சார்பாக மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வழங்கப்படும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
பொதுமக்களை பொறுத்தவரை இந்த கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட்டாலே, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story