போலி மதுபானம் தயாரித்து விற்ற 4 பேர் கைது
திண்டிவனம் அருகே போலி மதுபானம் தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சாராயத்துடன் கலர் பொடி கலந்து விற்றது அம்பலமாகி உள்ளது.
திண்டிவனம்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு கும்பல் போலி மதுபானம் தயாரித்து திண்டிவனம் பகுதியில் அதிக விலைக்கு விற்பதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
20 லிட்டர் சாராயம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷணை இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் தனிப்படை போலீசார் கொடியம் கூட்டுரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். அதில், 20 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில், எறையானூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் சதீஷ்குமார்(வயது 33), புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பழனி மகன் சிவக்குமார்(55) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கலர் பொடி கலந்து விற்பனை
இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் கீழ்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் அன்பழகன், வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்த காளி மகன் ரவி(47) உள்ளிட்ட 4 பேரும் புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் காலி மதுபாட்டில்கள், போலி ஸ்டிக்கர் உள்ளிட்டவைகளை வாங்கி வந்து, சாராயத்துடன் கலர் பொடியை கலந்து போலி மதுபானம் தயாரித்துள்ளனர். பின்னர் அதனை 2 ஆயிரம் காலி பாட்டிலில் அடைத்து, அதில் போலி ஸ்டிக்கரை ஒட்டி, புதிய மூடி போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
அதாவது முதற்கட்டாக 1208 போலி மதுபாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். மேற்கொண்டு போலி மதுபானம் தயாரிப்பதற்காக சாராயம் வாங்கி, அதனை கடத்தி வந்தபோது 2 பேரும் போலீசாரிடம் சிக்கியதால், அந்த கும்பல் போலீசாரிடம் மாட்டிக்கொண்டது.
4 பேர் கைது
இதனை தொடர்ந்து சதீஷ்குமார், சிவக்குமார், அன்பழகன், ரவி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 792 போலி மதுபாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story