கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
ரூ.30 கோடி பாக்கி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மையமாகக் கொண்டு வாணாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான மழுவும்பட்டு, சதா குப்பம், அகரம்பள்ளிபட்டு, தொண்டாமனூர், தச்சம்பட்டு, அல்லிகொண்டாபட்டு, தலையாம்பள்ளம், கொட்டையூர், வாழவச்சனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் பல லட்சம் டன் கரும்பு பயிர் செய்து அதனை அரவைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2020-21-ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய சுமார் ரூ.30 கோடி வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கரும்பு பயிரிடப்பட்ட நிலங்களுக்கு இடுபொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழங்க வேண்டும்
எனவே கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான கரும்பு கடன்கள் வங்கியிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னரும் விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் வழங்காததால் தனி நபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி கரும்பு சாகுபடி செய்யக்கூடிய சூழல் நிலவி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு சாகுபடி செய்வதற்கு ஏதுவாக வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story