ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரி கொரோனாவுக்கு பலி
பொள்ளாச்சி பகுதியில் 225 பேருக்கு கொரோனா உறுதியானதுடன், ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரி பலியானார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 225 பேருக்கு கொரோனா உறுதியானதுடன், ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரி பலியானார்.
வட்டார மருத்துவ அதிகாரி பலி
ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரியாக பழனிசாமி (வயது 55) என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது.
அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனைமலை வட்டார மருத்துவ அதிகாரி கொரோனாவுக்கு பலியானது டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
225 பேருக்கு கொரோனா
மேலும் பொள்ளாச்சி நகரில் 21 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 29 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 44 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 56 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 43 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 20 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3,136 பேர் குணம்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகாக்களில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் 3,136 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
1,812 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 719 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் அறிகுறி இருந்த 208 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story