ரேஷன் கார்டு இல்லாத ஆதிவாசி மக்களுக்கு நிவாரண பொருட்கள்
மூலக்காடு கிராமத்தில் ரேஷன் கார்டு இல்லாத ஆதிவாசி மக்களுக்கு நிவாரண பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா மேபீல்டு அருகே மூலக்காடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 36 குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஆதிவாசி மக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கினர்.
இதற்கிடையில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு கொரோனா உதவி தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைதொடர்ந்து ஆதிவாசி மக்கள் அரசு உதவி தொகை ரூ.2 ஆயிரத்தையும், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கினர். இதனை வைத்து ஆதிவாசி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆதிவாசி மக்கள் சிலர் ரேஷன் கார்டு இல்லாததால் கொரோனா நிதியும், ரேஷன் பொருட்களும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் வருவாய் துறையினர் ஆதிவாசி கிராமத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
இதில் சில வீடுகளில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த 6 ஆதிவாசி குடும்பத்தினர் ரேஷன் கார்டு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் பெயர் விவரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் குழு வாங்கி ரேஷன் கார்டு வாங்குவதற்காக ஆன்-லைனில் விண்ணப்பித்தனர்.
தொடர்ந்து அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஆர்.டி.ஓ. ராஜகுமார் வழங்கினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்த சில குடும்பங்கள் ரேஷன் கார்டுகள் இதுவரை வாங்காமல் இருந்துள்ளனர்.
இதனால் அரசின் நிவாரண தொகை கிடைக்காமல் உள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story