கொட்டி தீர்த்த கனமழையால் குமரியில் அணைகள் நிரம்பின


கொட்டி தீர்த்த கனமழையால் குமரியில் அணைகள் நிரம்பின
x
தினத்தந்தி 27 May 2021 11:16 PM IST (Updated: 27 May 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் கொட்டி தீர்த்த கனமழையால் அனைத்து அணைகளும் நிரம்பின. பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

நாகர்கோவில்:
குமரியில் கொட்டி தீர்த்த கனமழையால் அனைத்து அணைகளும் நிரம்பின. பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
கொட்டி தீர்த்த கனமழை
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. ஆறுகள், கால்வாய்களில் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நேற்று காலையிலும் விட்டு, விட்டு மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 93.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
இதே போல் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-90.6, பெருஞ்சாணி-59.2, சிற்றார் 1-49, சிற்றாறு 2-47, மாம்பழத்துறையாறு-45.2, முக்கடல்-28, பூதப்பாண்டி-32, களியல்-60, கன்னிமார்-57.4, கொட்டாரம்-46.2, குழித்துறை-23, நாகர்கோவில்-53.4, புத்தன்அணை-60.4, சுருளோடு-62.4, தக்கலை-32, குளச்சல்-12.6, இரணியல்-22.4, பாலமோர்-88.4, ஆரல்வாய்மொழி-15, கோழிப்போர்விளை-38, அடையாமடை-59, குருந்தன்கோடு-40.2, முள்ளங்கினாவிளை-26 ஆனை கிடங்கு-37.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகள் நிரம்பின
கனமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5,819 கனஅடி தண்ணீர் வந்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.86 அடியாக இருந்தது. இதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடியாக இருந்தது. அணைக்கு 5,171 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நிரம்பியுள்ளது. சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளும் நிரம்பியது. அதாவது 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையில் 16.70 அடியும், சிற்றார்-2 அணையில் 16.80 அடி தண்ணீர் உள்ளது. பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணைக்கு 2,578 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு 1,450 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 135 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 255 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.  பொய்கை அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  16.60 அடியாக இருந்தது. மலைப்பகுதியில் பெய்த கனமழையால் இரண்டு நாட்களில் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து நேற்று 25.60 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
உபரிநீர் திறப்பு
நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையும் நிரம்பியது. அணைக்கு 20 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியதால் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 6,508 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 996 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து 1,578 கனஅடியும் தண்ணீர் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
வடியாத வெள்ளம்
இந்த தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு உள்ளதால் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பழையாறு, கோதையாறு, பரளியாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரம், கால்வாய் கரையோர பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியபடி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள், 3 ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னந்தோப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
பேச்சிப்பாறை கடம்பமூடு அருகே உள்ள பொன்னையாகுளம் சாலை வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக மணியங்குழி-பேச்சிப்பாறை சாலையில் போலீசார் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

Next Story