ஊட்டி, குன்னூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


ஊட்டி, குன்னூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2021 11:17 PM IST (Updated: 27 May 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, குன்னூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அன்பு அண்ணா காலனி, பெர்ன்ஹில், கிரீன்பீல்டு, காந்தல், முத்தோரை, கோத்தகண்டி, இத்தலார், எமரால்டு, காட்டுக்குப்பை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அங்கு சுகாதார பணிகள் நடைபெறுகிறதா, காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, தொற்று கண்டறியப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். வீடு, வீடாக உடல் வெப்பநிலை, சளி, காய்ச்சல் அறிகுறி ஏதேனும் உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். 

பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா என்று அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் அருகே உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் உள்ளே வருகிறார்களா, உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்கிறார்களா என்று போலீசார் மூலம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் குன்னூர் நகராட்சி, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, ஊட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story