டாக்டர் வீட்டில் 48 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
டாக்டர் வீட்டில் 48 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
கோவை
கோவையில் டாக்டர் வீட்டில் 48 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது. அதில் பங்கு கேட்ட2 கூட்டாளிகளை கத்தியால் குத்திய கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டான்.
இந்த திருட்டு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
டாக்டர் வீட்டில் நகை திருட்டு
கோவை நஞ்சப்பாரோடு உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் பழனியப்பன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. டாக்டரின் மகள்கள் 2 பேர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று டாக்டர் பழனியப்பன் ஈரோட்டுக்கு சென்றார்.
இதனால் அவருடைய மனைவி ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் நள்ளிரவு நேரத்தில் டாக்டரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து திறந்து 48 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர்.
பங்கிடுவதில் தகராறு
பின்னர் அந்த மர்ம நபர்கள் சூலூர் பகுதிக்கு சென்றனர். அங்கு கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி (வயது27) திருட்டு பொருட்களை எடுத்து சரி பார்த்தான்.
அப்போது அதில் கூட்டாளிகள் பங்கு கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்தி, தனது கூட்டாளிகள் தமிழரசன் (23), ஜோதி (22) ஆகிய 2 பேரை கத்தியால் குத்தினான். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொரு கூட்டாளி பிரவீன் தப்பி ஓடிவிட்டான்.
கத்திக்குத்து
கத்திக்குத்தில் காயம் அடைந்த தமிழரசன், ஜோதி ஆகியோர் அலறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.
அவர்களிடம் கோவை மத்திய பகுதி உதவி கமிஷனர் பெரியசாமி மற்றும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் டாக்டர் பழனியப்பனின் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருட்டு கும்பலிடம் இருந்த 48 பவுன் தங்கநகை, வெள்ளிப்பொருட்கள், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
கும்பல் தலைவன் கைது
இதைத்தொடர்ந்து கத்திககுத்தில் காயம் அடைந்த தமிழரசன், ஜோதி ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு உள்ளனர். பங்கு கேட்ட 2 கூட்டாளிகளை கத்தியால் குத்திய கும்பல் தலைவன் புகழேந்தி கைது செய்யப்பட்டான்.
பிரவீன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருடிய நகைகளை பங்கிடுவதால் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்தில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story