கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த  அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 May 2021 11:28 PM IST (Updated: 27 May 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

கோவை
தொற்று பரவலில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளதால், கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

10 எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர் நாகராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். 

அதில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு  உள்ளது.


பின்னர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது

மக்கள் பீதி

தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். 

கோவையில் தினமும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மின் மயானங்களில் இடமில்லாத நிலை உள்ளது. 

ஆக்சிஜன் படுக்கை அமைக்க அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அவர்க ளிடம் மனு அளித்தோம். மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிக வாகனங்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். 

ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோய் பரவிக்கொண்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தனி அலுவலர்

கோவையில் 21 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உள்ளது. ஒரு வீதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அதற்கு உரிய அதிகாரியை நியமித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்க்க வலியுறுத்தி உள்ளோம். 

தனியார் மருத்துவமனைகளில் முதல் - அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சையை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும். 

தடுப்பூசியை கூடுதலாக வரவழைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல் இந்த அரசும் செய்ய வேண்டும் என்பதை ஒரு அறிவுரையாக முன் வைக்கிறோம்.

தீவிரப்படுத்த வேண்டும்

தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வேகம் போதுமானது அல்ல. மக்களுக்கு உதவி செய்ய அனுமதி கேட்கிறோம். ஆனால் மறுக்கிறார்கள். அம்மா உணவகத்தில் 3 மாதம் இலவசமாக உணவு வழங்கினோம். அதை இந்த அரசு செய்ய வேண்டும். 

இல்லை என்றால் நாங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம். எங்களை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க எம்.எல்.ஏ. நிதியை தருவதாக கூறினோம். இதுவரை பதில் இல்லை. 

ஊரடங்கில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா குறையும். கொரோனாவை கட்டுப்படுத்த கோவைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். கோவை மாவட்டத் தில் அ.தி.மு.க வெற்றி பெற்று இருந்தாலும் மு.க.ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன் (கோவை வடக்கு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), வி.பி.கந்தசாமி (சூலூர்), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), அமுல் கந்தசாமி (வால்பாறை), கோவை தெற்கு தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story