களக்காடு அருகே பச்சையாறு கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்


களக்காடு அருகே  பச்சையாறு கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்
x
தினத்தந்தி 27 May 2021 11:41 PM IST (Updated: 27 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே பச்சையாறு கால்வாயை விவசாயிகள் தூர்வாரினர்.

களக்காடு:
களக்காடு அருகே பச்சையாறு கால்வாயை விவசாயிகள் தூர்வாரினர்.

பச்சையாறு கால்வாய்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தேவநல்லூர் பச்சையாறு கால்வாய் மூலமாக தேவநல்லூர் குளம், பொத்தைசுத்தி குளம், கள்ளிகுளம், புதுக்குளம், மீனவன்குளம், கைலாசபேரி குளம் உள்ளிட்ட குளங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பச்சையாறு கால்வாய் தூர்வாரப்படாததால், அங்கு அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்து, மண் மேடுகளாக காட்சி அளித்தது.

தூர்வாரிய விவசாயிகள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்ததால், களக்காடு தலையணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து தேவநல்லூர் பச்சையாறு கால்வாயின் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில், அந்த கால்வாயை தூர்வார விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி விவசாயிகள்  பச்சையாறு கால்வாயில் உள்ள அமலைச் செடிகள், புதர் செடிகள், மண் மேடுகளை அகற்றி தூர்வாரும் பணியை தொடங்கினர். தொடர்ந்து அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில், கால்வாயில் தூர்வாரும் பணியை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story