திருச்சி மாவட்டத்தில் போலீசாரை அதிகமாக ஆட்கொள்ளும் கொரோனா; இதுவரை 200 பேர் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் போலீசாரை கொரோனா தொற்று அதிகமாக ஆட்கொண்டுள்ளது. இதுவரை 200 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் போலீசாரை கொரோனா தொற்று அதிகமாக ஆட்கொண்டுள்ளது. இதுவரை 200 பேர் பாதிப்புக்குள்ளாகி இரு க்கிறார்கள்.
கொரோனா முழு ஊரடங்கு
கொரோனா.... என்ற சொல்லை கேட்டாலே இன்று நாடே அதிர்ந்துபோய்தான் உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. ஒருபுறம் தினமும் கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, மறுபுறம் கோவிஷீல்டு, கோவேக்சின் என தடுப்பூசிகள் போடும் பணி என முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முக கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்ற கண்டிப்பு. அதை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.200 அபராதம். வர்த்தக நிறுவனமாக இருந்தால் ரூ.5 ஆயிரம் என்று அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கடைகள் திறப்பு இல்லை. ஆனாலும், தேவையின்றி வெளியில் திரியும் நபர்கள் மீது வழக்கு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் என கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் கொரோனா தொற்று பரவல் குறைந்தபாடில்லை.
நிரம்பி வழியும் நோயாளிகள்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். தினமும் 500 பேர் டிஸ்சார்ஜ் என்றால், அதை விட 3 மடங்கு அதாவது 1,500 பேருக்கு மேல் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இன்மை, ஆக்சிஜன் தட்டுப்பாடு என குறைபாடு அதிகரித்து வருகிறது. தேவையை பூர்த்தி செய்ய கல்லூரி, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்கள் சிறப்பு முகாமாக மாறி வருகிறது.
பாதிப்பு போலீசாருக்கு அதிகம்
கொரோனா பாதிப்பில் அரசு ஊழியர்களை பொறுத்தவரை காவல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளே அதிகமாக உள்ளனர். காரணம், பொதுமக்களுடன் அதிகம் தொடர்பில் இருப்பவர்கள் காவல்துறையினர்தான். பாதுகாப்பில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தி, பொதுமக்களை தொற்றில் இருந்து காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், அவர்களுடன் அதிகமாக தொடர்பில் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, போலீஸ்காரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் கொரோனா விடாப்பிடியாக தொற்றி விடுகிறது. தினமும் 10 முதல் 15 போலீசாராவது கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். முகக்கவசம் அணிகிறார்கள். சானிடைசர் பயன்படுத்துகிறார்கள். சமூக இடைவெளி பணியின்போது கடைப்பிடிக்கிறார்கள். ஆனாலும், எப்படியாவது ஒரு வகையில் கொரோனா தொற்றிக்கொள்கிறது.
இதுவரை 200 போலீசார் பாதிப்பு
கடந்த ஆண்டு (2020)-ம் ஆண்டு கொரோனா முதல் அலையில் கிட்டத்தட்ட திருச்சி மாநகரில் மட்டும் போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 100 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு (2021) கொரோனா 2-வது அலை வேகமாக பரவ தொடங்கியது. கடந்த 2 மாதங்களில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் 100 போலீசார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டு இருக்கிறார்கள். 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், அதை கொரோனா தொற்று என உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
95 சதவீதம் தடுப்பூசி
போலீசார் தொடர் களப்பணியில் இருந்து வருவதால், திருச்சி மாநகரில் இதுவரை 95 சதவீத போலீசார் கொரோனா தடுப்பூசி 2 முறை போட்டு விட்டனர். 5 சதவீதம் பேர் உடல் நலம் பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலிலும் பொதுமக்கள் நலனுக்காக ஊரடங்கு வேளையில் தொடர் காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தாங்கள் சுயபாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 பெண் போலீசுக்கு தொற்று
கொரோனா வைரஸ் பலதரப்பட்ட மக்களின் உயிரையும் காவு வாங்கி வருகிறது. இதில் போலீசாரையும் அதுவிட்டு வைக்கவில்லை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசார், ஒரு காவலர் உள்ளிட்டோர் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் 2 பெண் போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். ஒரே போலீஸ் நிலையத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீசார் மத்தியில் பெரும் பீதிஏற்படுத்தியுள்ளது. இதுபோல் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story