முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு வழங்கி உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டுகோள்


முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு வழங்கி உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 May 2021 1:52 AM IST (Updated: 28 May 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

தனியார் ஆஸ்பத்திரிகள் அரசு வழங்கி உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு
தனியார் ஆஸ்பத்திரிகள் அரசு வழங்கி உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
காப்பீட்டு திட்டம்
ஈரோட்டில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து, கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக, இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்த நேரமாக இருந்தாலும் மக்கள் மீது அக்கறை காட்டி இந்த பணிகளை செய்கிறார்கள்.
தனியார் ஆஸ்பத்திரிகள்
எந்த புகார்கள் அவர்களின் கவனத்துக்கு வந்தாலும் உடனடி நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகள் பெரும்பாலும் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் இந்த கடுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரசு வழங்கி உள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றி புகாருக்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும் என்று எனது வேண்டுகோளை வைக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Next Story