ஈரோட்டில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி; இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தகவல்


ஈரோட்டில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி; இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 2:07 AM IST (Updated: 28 May 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருந்ததாக இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.

ஈரோடு
ஈரோட்டில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருந்ததாக இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.
கருப்பு பூஞ்சை
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவராக செயல்படுபவர் டாக்டர் சி.என்.ராஜா. இவர் நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை கடுமையாக பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்திய அளவில் சுமார் 10 ஆயிரம் பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வெளியே வந்தவர்கள் தான். இதில், அதிகமாக குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானாவில் கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளது. தமிழகத்திலும் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவல் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விரைவில் பாதிப்பு
கருப்பு பூஞ்சை தொன்றுதொட்டு இருக்கும் நோய்தான். சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள், கொரோனாவின்போது ஸ்டீராய்டு போன்ற மருந்து எடுத்து கொண்டவர்கள், வேறு பல நோய்கள் இருப்பவர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. 
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், உடல் உறுப்பு அறுவை மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்று நோயால் பாதித்தோருக்கு  இது விரைவாக பாதிப்பை ஏற்படுத்தும்
இது சாதாரணமாக காற்றில் இருக்கக்கூடிய பூஞ்சை நோய். சாதாரண கால கட்டத்தில், பத்து லட்சம் பேரில் 1.7 சதவீதம் அல்லது 1.8 சதவீதம் என்ற அளவில்தான் பாதிப்பு ஏற்படும். தற்போது அதிகமாக இருப்பதால், கவனமாக இருக்க வேண்டும். பதற்றப்பட வேண்டியது இல்லை. அறிகுறி இருப்பவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று குணமடையலாம்.
3 பேர்
நோய் பரவிவிட்டால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவர். அறுவை சிகிச்சை அதிகமாக செய்ய வேண்டிய நிலை இருக்கும். கண் பாதிப்பு, பல் பாதிப்பு இருந்தால் உயிரைக்காப்பாற்ற அந்த உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த நிலைக்கு போகாமல், சிகிச்சை பெற வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களின் பாதிப்பு தொடர்பாக சிலர் ஆலோசனை கேட்டனர். இதில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருந்தது. உடனடியாக கோவை சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி உள்ளோம். காரணம் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மூளை, நரம்பியல் சிகிச்சை மருத்துவர், பிளாஸ்டிக்  அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுவார்கள். இந்த வசதிகள் கோவை போன்ற மாநகர்களில் உள்ள கூட்டு மருத்துவ சிகிச்சை மூலம் தான் மருத்துவம் செய்ய முடியும். எங்கள் அறிவுரையை ஏற்று அவர்களும் அங்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.
கருப்பு பூஞ்சை நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் கொரோனா வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவில் மீண்டவர்களும் அடுத்த 15 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருந்தால் கருப்பு பூஞ்சை தொற்றில்    இருந்து  தப்பலாம்.
இவ்வாறு இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.

Next Story