முகாம்களுக்கு செல்ல மறுத்து உணவுக்காக காத்து நிற்கும் சாலையோர வாசிகள்; கொரோனா பரவும் அபாயம்
முகாம்களுக்கு செல்ல மறுத்து உணவுக்காக காத்து நிற்கும் சாலையோர வாசிகளால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
ஈரோடு
முகாம்களுக்கு செல்ல மறுத்து உணவுக்காக காத்து நிற்கும் சாலையோர வாசிகளால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
முகாம்கள்
ஈரோடு மாநகர் பகுதியில் அனைத்து வீதிகளிலும் சாலையோர வாசிகள் உள்ளனர். குறிப்பாக ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் மாநகராட்சி அலுவலக பகுதி, ரெயில் நிலையம், மணிக்கூண்டு, சத்தி ரோடு, பவானி ரோடு, கே.என்.கே.ரோடு, காவிரி ரோடு, ஸ்டேட் வங்கி ரோடு என்று அனைத்து பகுதிகளிலும் சாலையோர வாசிகளை காண முடியும்.
பெரிய மாரியம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா பகுதியில் பக்தர்கள் பெருமளவு தினசரி உணவுகள் கொடுத்து வருவதால் இந்த பகுதிகளில் நிரந்தரமாக தங்கி அங்கேயே குடியிருந்து வருபவர்களும் உண்டு. பலர், தினசரி கிடைத்த கூலி வேலைகளுக்கு சென்று தங்குவதற்கு இட வசதி இல்லாததால் சாலையோர வாசிகளாக உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கின்போது இவர்கள் பல இடங்களிலும் கூடி வசித்து வந்ததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முகாம்கள் அமைத்து உள்ளனர்.
இந்த முகாம்களில் அந்தந்த பகுதி சாலையோர வாசிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. ஆனால், அடுத்த அறிவிப்பு வரும்வரை அவர்கள் முகாமில் இருந்து வெளியே விடப்பட மாட்டார்கள்.
இடைவெளி இல்லை
இந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பாத சாலையோர வாசிகள் பலரும் இன்னும் ஈரோடு வீதிகளில் தங்கி உள்ளனர். மேம்பாலத்தின் அடியிலும், மாரியம்மன் கோவில் பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி பகுதிகளிலும் அவர்கள் சுற்றிக்கொண்டும், ஒரே இடத்தில் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பல சமூக அமைப்புகள் தினசரி 3 வேளையும் நேரம் தவறாமல் உணவு வழங்கி வருகிறார்கள். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் 3 வேளை உணவு கிடைப்பதால் இவர்கள் முகாம்களுக்கு செல்ல மறுத்து வருகின்றனர். நேற்று காமராஜ் வீதியில் தன்னார்வ அமைப்பு சார்பில் உணவு வழங்க வந்தபோது 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்து வரிசையில் நின்று உணவு வாங்கி சென்றனர். போதிய பாதுகாப்பான முக கவசங்கள், இடைவெளி எதுவும் இல்லாமல் அவர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் உதவ வரும் தன்னார்வலர்களுக்கு கூட கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
அனைத்து வசதி
உணவு இல்லாமல் வாடுபவர்களுக்கு உணவு வழங்குவது சிறந்த மனிதநேயப்பணிதான். ஆனால், முகாம்களில் தங்க வைத்து முறையாக கவனிக்கும் இடத்துக்கு இவர்கள் செல்லாமல் இருப்பதால் இன்னும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தன்னார்வ அமைப்புகள் முகாம்களில் தங்கி இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்களுக்கு உதவி செய்ய முன்வருவது நல்லது. மேலும், வீதியில் உள்ள அனைவரையும் முகாமுக்கு கொண்டு வரவும், முகாமுக்கு வந்தால்தான் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கட்டாயப்படுத்தினால் இன்னும் பலரை முகாம்களுக்கு கொண்டு வர முடியும் என்று தன்னார்வ அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story