சேலத்தில் சந்து கடைகளில்மது பாட்டில் ரூ.700-க்கு விற்பனை
சந்து கடைகளில்மது பாட்டில் ரூ.700-க்கு விற்பனை
சேலம்:
முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சேலத்தில் சந்து கடைகளில் ஒரு பாட்டில் மது ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் மதுவகைகள் கிடைக்காமல் மது பிரியர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் ஆங்காங்கே சந்து கடைகளில் மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ஊரடங்கு போடுவதற்கு முன்பே மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொண்டனர். அதேசமயம் சந்து கடையில் மது வகைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மொத்தமாக மது வகைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரூ.700-க்கு விற்பனை
சேலத்தில் ஆரம்பத்தில் ரூ.130 மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் மதுபாட்டில் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது போலீஸ் கெடுபிடி அதிகரிப்பு காரணமாக சந்து கடைகளில் மது பாட்டிலின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக பெரமனூர் கோவிந்த கவுண்டர் தோட்டம், கிச்சிபாளையம், கோரிமேடு, அடிவாரம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் வரை சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பதுக்கி வைத்திருந்த மதுவகைகள் அனைத்தும் விற்பனை ஆகி விட்டதால் தற்போது குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் மது பிரியர்கள் அந்த தொகையை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் சிலர் போலீசுக்கு தெரியாமல் சந்து கடைகளில் மது வகைகளை விற்பனை செய்தனர். அப்போது இதுபற்றி அறிந்த மது பிரியர்கள் சம்பந்தப்பட்ட நபரை போனில் தொடர்பு கொண்டு ரூ.700 கொடுத்து குவார்ட்டர் பாட்டில் வாங்கி சென்றனர். ஒரு சிலர் விலையை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்து இவ்வளவு தொகை கொடுத்து சரக்கு வாங்க வேண்டுமா? என்று யோசித்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
போலீசார் திணறல்
அதே சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில் சந்து கடைகளில் ஒரு குவார்ட்டர் ரூ.1,000-க்கும், ஆப் பாட்டில் ரூ.2,000-க்கும் விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள சந்தையில் மது வகைகளை வாங்கி பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள் குஷி அடைந்துள்ளனர். அதேசமயம் சட்டவிரோத செயல்களில் மது விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
Related Tags :
Next Story