கோவிஷீல்டு மருந்து தயாரிப்பாளர் ஆதார் பூனாவாலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மராட்டிய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கோவிஷீல்டு மருந்து தயாரிப்பாளர் ஆதார் பூனாவாலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு; மராட்டிய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 May 2021 1:43 AM GMT (Updated: 28 May 2021 1:43 AM GMT)

கோவிஷீல்டு மருந்து தயாரிப்பாளர் ஆதார் பூனாவாலாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து பதில் அளிக்க மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உரிமையாளருக்கு மிரட்டல்

புனேயில் உள்ள சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆதார் பூனாவாலா சமீபத்தில் தடுப்பூசி மருந்து கேட்டு தனக்கு மிரட்டல் வருவதாக பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினருடன் லண்டன் சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்தது. இந்தநிலையில் ஆதார் பூனாவாலாவுக்கு ‘இசட்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்ந்தால், அது தடுப்பூசி மருந்து உற்பத்தியை பாதிக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதேபோல ஆதார் பூனாவாலாவுக்கு வந்த மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கூடுதல் பாதுகாப்பு

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, என்.ஆர். போர்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பூனாவாலா நல்ல பணியை செய்து கொண்டு இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரையில் அவருக்கு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாநில அரசு அவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கலாம்’’ என கூறியது.

மேலும் இது குறித்து பதில் அளிக்கவும் மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணையை ஜூன் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story