பாலியல் வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியை உடனே கைது செய்ய வேண்டும்; மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்


பாலியல் வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியை உடனே கைது செய்ய வேண்டும்; மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2021 2:23 AM GMT (Updated: 28 May 2021 2:23 AM GMT)

பாலியல் வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மனசாட்சிக்கு எதிராக...

எங்களை பொறுத்தவரையில் தனிநபரை விட கர்நாடக போலீஸ் துறையின் கவுரவம் முக்கியம். போலீஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளியை இதுவரை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளானவரை சுதந்திரமாக நடமாட போலீசார் விட்டுள்ளனர்.

வரும் காலத்தில் பாலியல் புகார்கள் வந்தால், அவற்றுக்கு ரமேஷ் ஜார்கிகோளியின் வழக்கை முன் உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். போலீசார் நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக பணியாற்றி கொண்டிருப்பார்கள். போலீசார் மனசாட்சிக்கு எதிராக செயல்படக்கூடாது.

கைது செய்ய வேண்டும்

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்வதாக கூறினார். அந்த பெண் நேரடியாக வந்து புகார் கொடுத்துள்ளார். வாக்குமூலமும் அளித்துள்ளார். ஆனால் இதுவரை ரமேஷ் ஜார்கிகோளியை போலீசார் கைது செய்யவில்லை. அவரை உடனே கைது செய்ய வேண்டும்.

அவரை கைது செய்வதை விட்டுவிட்டு போலீசார் வேறு யாரையோ தேடுகிறார்கள். அந்த பெண்ணின் பெற்றோர், அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக பேசினர். எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஆனால் அந்த பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் அடிக்கடி நோட்டீசு கொடுத்து தொல்லை கொடுக்கிறார்கள். ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் கைது செய்யாமல் மவுனம் காக்கிறார்கள்.

உடல் கவச உடை

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அனைவரும் மாவட்ட ஆஸ்பத்திரிகள் அல்லது பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி, தாலுகா ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். கொரோனா நோயாளிகள் யாரும் உடல் கவச உடை அணிந்து கொண்டு சிகிச்சை பெறுவது இல்லை. ஆனால் ரமேஷ் ஜார்ககோளி அந்த உடையை அணிந்திருந்தார்.

யாரை பாதுகாக்க போலீசார் முயற்சி செய்கிறார்கள். பாலியல் நிகழ்வு இருதரப்பின் சம்மதத்துடன் நடந்ததா அல்லது சம்மதம் இல்லாமல் நடந்ததா என்பதை போலீசார் முடிவு செய்ய முடியாது. இதை கோர்ட்டு தான் முடிவு செய்யும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story