மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
x
தினத்தந்தி 28 May 2021 10:34 AM IST (Updated: 28 May 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது.

பலத்த கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 நாட்களாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று காலை கடல் வழக்கத்திற்கு மாறாக 5 அடி உயரத்துக்கு சீறி எழும்பின. ராட்சத அலைகள் கரைப்பகுதி வரை 20 அடி தூரத்திற்கு உட்புகுந்தன. கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதால் அங்கு தங்கள் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்கள் கடும் தவிப்புக்கு உள்ளானார்கள். படகுகளை நிறுத்த மாற்று இடம் இல்லாததால் மீனவர்கள் தங்கள் படகுகளை கயிறு மூலம் அருகில் உள்ள கட்டிடங்களில் கட்டி பாதுகாத்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கூறும்போது:-

தற்போது கடலில் ஏற்படும் பருவமாற்றம், சீதோஷ்ண நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது சுழல் காற்று வீசுகிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்கவும் மீனவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடல் சீற்றம், கடல் அரிப்பு காரணமாக மாமல்லபுரம் மீனவர் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. கடல் சீற்றம் ஏற்படாத வகையில் தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவுகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினார்.


Next Story