நாகையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் - நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு செல்கின்றனர்


நாகையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் - நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு செல்கின்றனர்
x
தினத்தந்தி 28 May 2021 6:31 PM IST (Updated: 28 May 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாக பொதுமக்கள் போட்டு கொள்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டு செல்கின்றனர்.

நாகப்பட்டினம், 

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் போடப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பின்னர் முதியோர்களுக்கும், இதனைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கியதால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதன்படி நாகை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ் 25,300 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. கடந்த 2 நாட்களாக 1000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்.. மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேர் என நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாகையில் காலை முதலே 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நாகை காடம்பாடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், ஆதார் கார்டுகளுடன் வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து அவர்களது ஆதார் எண் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அரை மணி நேரம் ஓய்வெடுப்பதற்காக அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் வீட்டுக்கு சென்றனர்.

காலை முதலே தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

Next Story