கம்பத்தில் குளக்கரையை சீரமைக்கும் விவசாயிகள்
கம்பத்தில் குளக்கரையை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்:
கம்பத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளது. இந்த குளங்களில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நெல் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குளத்தின் கரை வழியாக நிலங்களுக்கு விளைபொருட்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். மேலும் கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு பொதுமக்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீரப்பநாயக்கன்குளத்தின் கரை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் குளத்தின் கரை சேறும் சகதியுமாக மாறி விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் முதல்போக சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைய உள்ளது. அப்போது குளக்கரை வழியாக நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு சிக்கலாக இருக்கும். இதனால், கரையை சீரமைத்து கிராவல்மண் அடிக்க வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கிராவல் மண் அடிக்க எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கத்தின் சார்பில் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து வீரப்பநாயக்கன்குளத்தின் கரையை சீரமைக்க கிராவல் மண் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story