தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் ரேஷன் கடையில் அலைமோதிய கூட்டம் கொரோனாவுடன் கும்மியடித்த மக்கள்
தேனி அருகே வாழையாத்துப்பட்டியில் ரேஷன் கடையில் அலைமோதிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பது இல்லை.
தேனி அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தில் நேற்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக கடையின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் பலர் முக கவசம் அணியாமல் ரேஷன் கடையை முற்றுகையிடுவது போல் சுற்றி நின்று கொண்டு பொருட்கள் வாங்கினர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அலைமோதிய மக்கள் கூட்டத்தை கட்டப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறுவர், சிறுமிகள் பலரும் ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பொருட்களை வினியோகம் செய்ய முடியால் விற்பனையாளர் திணறும் நிலைமை ஏற்பட்டது. மக்கள் வரிசையில் நிற்காமல், கடையை சூழ்ந்து நின்று கொரோனாவுடன் கும்மியடிக்கும் நிலைக்கு சென்றனர்.
எனவே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கவும், மற்ற பகுதிகளில் கூட்டம் கூடாத வகையில் பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story