பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும். தாயார் அற்புதம்மாள் பேட்டி


பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும். தாயார் அற்புதம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 28 May 2021 9:45 PM IST (Updated: 28 May 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டைக்கு வருகை

30 நாட்கள் பரோல் பெற்று பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நேற்று நண்பகல் 12.30 மணியளவில் வந்தார். 

அவரை வெளி ஆட்கள் மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதி இல்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக தினசரி போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போடாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர், அவரது வீட்டுக்கு சென்று தினமும் கையெழுத்து வாங்குவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

2 துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார், பேரறிவாளனின் வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரறிவாளன் பரோலில் வந்தது குறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

முதல்-அமைச்சருக்கு நன்றி
எனது மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாலும், சிறுநீரக தொற்று இருப்பதாலும், தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நாட்கள் பரோல் கேட்டிருந்தேன்.
30 நாள் மட்டும் தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலும் எனது மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் உள்ளது. அவனுடைய உடல் நலனைக் கருதி நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story