கொரோனா சிகிச்சை முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பிய பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டதாக புகார்


கொரோனா சிகிச்சை முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பிய பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டதாக புகார்
x
தினத்தந்தி 28 May 2021 10:29 PM IST (Updated: 28 May 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கொரோனா சிகிச்சை முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பிய பெண்ணை, நடுவழியில் இறக்கி விட்டதாக புகார் எழுந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் விளக்கம் அளித்து உள்ளார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கொரோனா பாதித்தவர்களை சிகிச்சை மையத்திற்கு சுகாதாரத்துறையினர் அழைத்துச்செல்கின்றனர். பின்னர் அடுத்த சில தினங்களில் சிகிச்சை முடிந்ததும், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானார். தொடர்ந்து அந்த பெண்ணை கூடலூரில் உள்ள சிகிச்சை மையத்திற்கு சுகாதாரத்துறையினர் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், அவரை தனியார் மினி பஸ்சில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த பெண்ணை வீட்டுக்கு அருகில் கொண்டு சென்று விடாமல், மண்வயல் பஜாரில் டிரைவர் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததால், அந்த பெண் நடுவழியில் தவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து நேரில் வந்த ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் செயலாளர் ஆகியோர் ஒரு காரில் அந்த  பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் ஊராட்சி தலைவர் சுனில் கூறும்போது, கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரை அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் நடுவழியில் இறக்கி விடப்படுகின்றனர். முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர் என்றார்.

இந்த புகார் தொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டது தொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு முறைப்படி வரவில்லை. 

அந்த பெண்ணின் வீடு அமைந்து உள்ள பகுதிக்கு செல்ல சாலை வசதி இருந்தாலும், உள்ளே மினி பஸ் சென்றுவிட்டு திரும்பி வர வழி இல்லை.  இதனால் பஜார் பகுதியில் அந்த பெண்ணை டிரைவர் இறக்கி விட்டு வந்து உள்ளார் என்றார்.

Next Story