கோத்தகிரி பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் தீவிரம்


கோத்தகிரி பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 May 2021 5:08 PM GMT (Updated: 28 May 2021 5:11 PM GMT)

கோத்தகிரி பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

கோத்தகிரி,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக முழு ஊரடங்கிலும் கோத்தகிரி பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கி உள்ளதால், விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 
இதனால் அவர்கள் நஷ்டம் அடையும் நிலை காணப்பட்டது

இதை கருத்தில் கொண்டு தோட்டக்கலை, வேளாண் வணிக மற்றும் விற்பனை துறையினர் விளைநிலங்களுக்கே சென்று, விளைபொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளனர். 

இதன் காரணமாக விவசாய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தற்போது விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டுள்ள உருளைக்கிழங்கு பயிர்களில் இலை கருகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் விசை தெளிப்பான் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். ஆனால் பிற விவசாய பணிகளுக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்து வருவதில், இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே விவசாய தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story