சுயசிகிச்சை எடுப்பதால் அதிகரிக்கும் இறப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பற்றி அறியாமல் தாங்களாகவே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதால் பாதிப்பு அதிகமாகி பலர் பலியாகி வருகின்றனர். இதனால் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பற்றி அறியாமல் தாங்களாகவே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதால் பாதிப்பு அதிகமாகி பலர் பலியாகி வருகின்றனர். இதனால் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் மற்றும் அறிகுறி நோயாளிகள் பலர் பலியாகி வருகின்றனர். பெரிய நகரங்கள் தவிர்த்து பாதிப்பு குறைவாக உள்ள மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் ராமநாதபுரத்தில் அதிகம்பேர் பலியாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா நோயாளிகள் மற்றும் அதன் அறிகுறி நோயாளிகள் அதிகம் இறப்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆராய்ந்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லியிடம் கேட்ட போது:- ராமநாதபரம் மாவட்டத்தில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி தொடங்கியதும் அவர்களாகவே வீடுகளில் அதற்கான மருந்துகளை சாப்பிட தொடங்கு கின்றனர். இதுதவிர மருந்து கடைகளில் சென்று இதுதொடர்பான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு கொள்கின்றனர்.
உரிய சிகிச்சை
ஒரு கட்டத்திற்கு மேல் சென்றதும் பாதிப்பு குறையாத நிலையிலேயே பரிசோதனை, ஆஸ்பத்திரிக்கு வருவது போன்ற நடவடிக்கையில் இறங்குகின்றனர். அதற்குள் கொரோனா கிருமியின் தாக்குதல் நுரையீரல் வரை சென்று ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. பொதுமக்கள் இந்த அறிகுறி தெரிந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக இறப்பிற்கு காரணம் பொதுமக்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதும்தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரின் அறிவுரையின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாதவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொடர்பான மருந்துகள் வழங்கப்படமாட்டது என்று மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பரிசோதனை
இதுதொடர்பான அறிவிப்பை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்கப்பட்டுஉள்ளது. இதன்மூலம் மேற்கண்ட அறிகுறிகளுக்கு அச்சப்பட்டு கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடாமல் வேறு வழியின்றி டாக்டர்களை நாடிச்சென்று பரிசோதனை செய்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வழி ஏற்படும். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப நிலையிலேயே நோயின் அறிகுறி கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் இறப்பின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story