3-வது நாளாக ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு


3-வது நாளாக ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 May 2021 11:13 PM IST (Updated: 28 May 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணிக்கான நேர்காணலுக்கு 3-வது நாளாக ஏராளமானோர் குவிந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்:
மருத்துவ பணிக்கான நேர்காணலுக்கு 3-வது நாளாக ஏராளமானோர் குவிந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ பணி
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்தம்  அடிப்படையில் தற்காலிக மருத்துவ பணிக்கான நேர்காணல் கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 425 பேரும், 2-வது நாளான நேற்று முன்தினம் 812 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று, நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் காலை முதலே ஆஸ்பத்திரி வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
நேர்காணல்
பின்னர் காலை 10 மணிக்கு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, மருத்துவக் கல்லூரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நேர்காணல் நடந்தது. இதில் நர்சு பணியிடத்துக்கு 60 பேரும், டாக்டர் பணியிடத்துக்கு 44 பேரும், லேப் டெக்னீசியன் பணிக்கு 98 பேரும், பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு 104 பேரும், டேட்டா என்ட்ரி பணியிடங்களுக்கு 78 பேரும் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு 62 பேரும் விண்ணப்பித்தனர்.
இதன் மூலம் நேர்காணல் நடந்த 3 நாட்களில் மொத்தம் 1683 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேர்காணல் இன்றுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக இடைவெளி இல்லை
நேர்காணலுக்கு வந்து இருந்தவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. ஒருவருக்கு பின் ஒருவராக இடைவெளி இல்லாமல் வரிசையில் நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற நேர்காணல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கட்டாயம் அரசு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story