குமரியில் பயிர் சேத கணக்கெடுப்பு பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும்


குமரியில் பயிர் சேத கணக்கெடுப்பு பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும்
x
தினத்தந்தி 28 May 2021 11:18 PM IST (Updated: 28 May 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் பலத்த மழைக்கு 170 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பயிர் சேத கணக்கெடுப்பு இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:
குமரியில் பலத்த மழைக்கு 170 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பயிர் சேத கணக்கெடுப்பு இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி
மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-
முன்னெச்சரிக்கை  நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து ஓரளவு கணக்கு எடுத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் நேரத்தில் எல்லாம் இந்த சம்பவம் தொடர்ந்து குமரியில் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆகவே எந்தெந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கும் என்பதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த காரணத்தால் ஓரளவு முன்னெச்சரிக்கையாக தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. 
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த 767 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் வடிய தொடங்கும்
ஆய்வின் போது பல இடங்களில் குளங்களின் கரைகள், கால்வாய்கள் உடைந்திருப்பதை பார்த்தோம். அதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதேபோல் சாலைகளை சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதிக திறன் உடைய மோட்டார்களை பயன்படுத்தி வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
இடிந்த வீடுகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றை எல்லாம் இப்போது கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்குள் இந்த பணிகள்    முடிவடை யும். தண்ணீர் முழுமையாக குறைந்த பிறகு தான் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்ற விவரம் முழுமையாக தெரியும். தற்போது தண்ணீருக்குள் வீடுகள் இருப்பதால் எந்த அளவில் சேதம் அடைந்து உள்ளது என்பது தெரியாத நிலை இருக்கிறது. மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கும்.
170 மின்கம்பங்கள் சேதம்
ஏறத்தாழ குமரி மாவட்ட பகுதியில் இந்த மழையின் காரணமாக மின்சாரத் துறைக்கு சொந்தமான 173 மின்கம்பங்கள் உடைந்து உள்ளன. அதில் 159 மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 14 மின்கம்பங்கள் நடப்பட வேண்டி உள்ளது. அதுவும் இன்றுக்குள் முடிந்து விடும். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 60 மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 
மேலும் 20 டிரான்ஸ்பார்மரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அந்த டிரான்ஸ்பார்மர்களின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையும் நாளை காலைக்குள் சரிசெய்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறோம். எனவே எல்லா பணிகளையும் அதிகாரிகள் அக்கறையோடு செய்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியதை அவர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகளும் அக்கறையோடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நிரந்தர தீர்வு
குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு அதிகப் படியான மழை பெய்துள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருக்கிறோம். தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் மீதமுள்ள கணக்கெடுப்பு பணிகளும் முடிந்த பிறகு சரி பார்த்து சேத விவரம் மற்றும் திட்ட மதிப்பீடு குறித்து முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். 
இதன் மூலம் குமரி மாவட்டத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தரும் பணியை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற சூழ்நிலை இருக்க கூடாது என்பதற்காக நிரந்தரத் தீர்வு காண என்ன வழி வகை இருக்கிறது? நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய திட்டங்களை வகுத்து தரவேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி நிரந்தர தீர்வுக்கான பணியையும் மேற்கொள்வோம்.
53 இடங்களில் உடைப்பு
குமரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையை பொருத்தவரையில் கால்வாய், குளங்களில் 53 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளை பொறுத்தவரையில் 238 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக நாங்கள் கணக்கிட்டுள்ளோம். இனிமேலும் அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள். தண்ணீர் குறைய, குறையத்தான் எந்தெந்த வீடு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பது முழுமையாக தெரியும். அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்று அதிகாரிகளிடம் தெரிவித்து முறையாக, சரியாக சேதமடைந்த வீடுகள், பயிர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், வீடுகளின் மேற்கூரை சேதம், சுவர் இடிந்தது என பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,100 வழங்கியிருக்கிறோம். ஆனால் இந்த நிதி போதாது என்று இங்கு இருக்கக் கூடியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதையும் நாங்கள் முதல்-அமைச்சரிடம் கூறி கூடுதல் நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுப்போம்.
பயிர்சேதம் கணக்கெடுப்பு
அதிகாரிகள் அறிக்கை தயாரித்த பிறகு தான் எவ்வளவு நிதி தேவை என்பது தெரியவரும். பயிர் சேதங்களைப் பொறுத்தவரையில் வேளாண்மை துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் இணைந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கிறார்கள். அதனால் உண்மையான விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 
மேலும் மழை வெள்ள சேத பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள எவ்வளவு நிதி தேவை? நிரந்தரமாக சீர் செய்வதற்கு எவ்வளவு நிதி தேவை? என்ற விவரங்களை திட்ட மதிப்பீடாக தயாரிக்க சொல்லியிருக்கிறோம். அதற்கு ஏற்றார்போல் நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகள் சேதம் அடைந்தவர்கள், பயிர் சேதம் அடைந்தவர்கள் என மொத்தம் 13 பேருக்கு ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் வழங்கினர். அப்போது, தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வருவாய்த் துறை ஆணையருமான பனீந்திர ரெட்டி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா, உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Next Story